Wednesday, November 21, 2012

உண்மையான சூப்பர் ஸ்டார் என் மாமனார் தான்! கோவா பட துவக்கவிழால் அக்ஷ்ய் பேச்சு!!

43வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக துவங்கியது. ஒரு கோடி முப்பது லட்சம் செலவில் இந்த விழாவிற்காக அமைக்கப்பட்ட ஏர் கண்டிஷன்ட் அரங்கில் விழாவை இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழா ஆரம்பத்தில் குத்து விளக்கு ஏற்றும் போது கூட கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார். விழாவில் துப்பாக்கி படநாயகி காஜல் அகர்வால், மத்திய தகவல்தொடர்புதுறை அமைச்சர் மனிஷ் திவாரி, கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் துவக்க விழாவில் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பேச ஆரம்பித்த அக்ஷ்ய் குமார், “என் தங்கை, பெற்றோர் மற்றும் நான் சனிக்கிழமைகளில், மதிய உணவு சாப்பிடாமல் பணத்தை சேர்த்து சனிக்கிழமை மாலை கண்டிப்பாக ஒரு திரைப்படம் பார்ப்போம். சினிமா டிக்கெட், நான்கு சமோசா, நான்கு மாங்கோ, ஐஸ்க்ரீம் இவற்றுக்கு பணம் சேர்ப்போம். இன்றும் என் மனைவி, மகனுடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் கட்டாயம் தியேட்டரில் படம் பார்க்கிறேன். கொஞ்சம் வளர்ந்து விட்டதால் சனிக்கிழமை பட்டிணி இருக்க வேண்டியதில்லை’  என்றார். “என்னைப் பொறுத்தவரை சினிமா என்றால் அர்ப்பணிப்பு, உற்சாகம், சஸ்பென்ஸ் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பம் சேர்ந்திருக்கும் நேரம்’ என்று பலத்த கைதட்டலுக்கிடையே அக்ஷ்ய் பேசினார்.

தொடர்ந்து பேசிய அக்ஷ்ய், இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் என் மாமனாரும்,  பிரபல நடிகருமான ராஜேஷ் கன்னா தான்! தொடர்ந்து பதினேழு வெற்றிப்படங்களை கொடுத்தவர். வேறு எந்த நடிகரும் இந்த சாதனை செய்ததில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு, ராஜேஷ் கன்னாஜி மட்டும் அல்ல, பிரபல இயக்குனர் யாஷ் சோப்ரா, தேவ் ஆனந்த், தாரா சிங், ஹங்கல் போன்ற மறைந்த கலைஞர்களுக்கும் சேர்த்து மவுன அஞ்சலி செலுத்துவோம் என்றார். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். மாமனாருக்கு இதைவிட சிறப்பான மரியாதை, மாப்பிள்ளை பெற்றுத் தரமுடியாது!

இந்தியாவின் நூறு ஆண்டு சினிமாவை ஒட்டி பல திரைப்படங்களிலிருந்த பாடல்கள் ஒலிக்கப்பட்டு, மேடையில் இளம் கலைஞர்கள், பொருத்தமான பல காஸ்ட்யூம்களில் நடனமாடினார்கள். 1936ல் வெளியான அசோக்குமார் நடித்த “அச்சுட் கன்யா’ படத்திலிருந்து பல பாடல்கள், மொகலே ஆஜம் படத்திலிருந்து “ப்யார்-கியாதோ டர்னா க்யா’ தேஜாப் படத்திலிருந்து ஏக், தோ, தீன், சார், பாஞ்ச்..., சக்தே படத்திலிருந்து (ஷாருக்கான்) சக்தே இந்தியா போன்ற பல பாடல்கள். அவற்றில் குறிப்பிடப்பட்ட மூன்று தமிழ் கலைஞர்கள் - மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர். ரோஜா படத்திலிருந்து “சின்ன சின்ன ஆசை’ பாடலுக்கு இளம் பெண்கள் இரண்டு நிமிடம் நடனமாடியபோது, பயங்கர கைதட்டல். 25 நிமிட நிகழ்ச்சியை உருவாக்கிய நடன இயக்குனர் ஸரோஜ் கான் பாராட்டுக்குரியவர். 100வது இந்திய சினிமாவிற்கு பொருத்தமான நிகழ்ச்சி தான்.

நடன நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல பாடகர் கைலாஷ் கேர் பதினைந்து நிமிடங்கள் இந்தி, பஞ்சாபி, காஷ்மீரி, கன்னடம் என்று பல மொழிகளிலிருந்து பாடல்களை, இடைவிடாது குறிப்புகள் ஏதுமின்றி, பாடி அசத்தினார். பல லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டு கைலாஷ் கேர், உண்மையில் பாடவில்லை, உதடு மட்டும் தான் அசைத்தார். ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள் மேடையில் ஒலிபரப்பினார்கள் என்று பயங்கர குற்றச்சாட்டை, டைம்ஸ் ஆப் இந்தியா கொளுத்திப் போட்டிருக்கிறது. கைலாஷ் கேர் என்ன சொல்கிறார் என்று நிதானமாக பார்ப்போம்.

No comments:

 
FreeWebSubmission.com