Monday, November 26, 2012

100 ஆண்டில் சிறந்த இந்திய சினிமா! கோவா படவிழாவில் சினிமா வி.ஐ.பி.க்களின் கருத்து!!

கோவா திரைப்பட விழாவில் இந்த ஆண்டு முதன் முறையாக சாய் - சேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேநீர் கொடுத்துக் கொண்டே திரைப்பட விஷயங்களை பேசிக் கொள்ளுவது. வரும் டெலிகேட்ஸ்களுக்கும் சூடாக தேநீர், சிப்ஸ், பிஸ்கட்ஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இந்திய சினிமாவின் நூறு வருடங்களில் வெளியான படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? ஒன்றுதான் சொல்ல வேண்டும் என்று திரைப்பட விழாவின் டைரக்டர் சங்கர் மோகன் ஆரம்பித்தார். மிகவும் கஷ்டமான காரியம்தான். காதல், ஆக்ஷன், காமெடி, உணர்வு என்று பல வகைப்படங்களில் ஒன்றைப் பற்றி சொல்லுவது தான் பெரிய டெஸ்ட் என்றார்.

* பிரபல இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், ரிக்விக் கதக் இயக்கிய “மேகே டாகாதாரா’, சத்யஜித் ரேயின் அபராஜிதா (1956) கிரிஷ் காஸரவல்லியின் நயி நேரலுவின் முதல் பாதி தனக்குப் பிடித்தவை என்றும், ஆனால் என்னுடைய ஓட்டு “அபாரஜிதா’க்குத் தான் என்றார். புனே பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவராக அந்த படம் பார்த்தது இன்றும், அந்தப்படம் முழுமையாக எனக்கு நினைவு இருக்கிறது என்றார்.

* பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.கருண் கூறுகையில், மலையான இயக்குனர் ஜி.அரவிந்தன் இயக்கிய “தம்பு’ (1978) தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றார்.

* தயாரிப்பாளர் சுரேஷ் ஜிண்டால் கூறுகையில், பல வகைகளில் உள்ள பல நல்ல படங்களை நான் பார்த்து ரசித்திருக்கிறேன். முடிவாக என்னுடைய சாய்ஸ், சத்யஜித் ரேயின் ஜல்சாகர் (1958) தான் என்றார்.

* பிலிம்ஸ் டிவிஷனின் டைரக்டர் ஜெனரல் வி.எஸ்.குண்டு கூறுகையில், சிறுவனாக நான் இருந்தபோது 1977ல் திலீப் குமார், வைஜெயந்திமாலா நடித்த “கங்கா ஜமுனா’ படத்தைப் பார்த்து அதன் டயலாக் இசை ஆகியவற்றில் மெய் மறந்திருக்கிறேன். அப்போது அந்த படத்தின் டைரக்டர் பெயர் என்ன என்று கூட எனக்கு தெரியாது என்றார். கங்கா ஜமுனா வெற்றிப்படத்தை இயக்கியவர் நிதின் போஸ்.

* பிரபல கன்னட இயக்குனர் கிரிஷ் காஸரவல்லி கூறுகையில், சத்யஜித் ரேயின் பதர் பாஞ்சாலி (1955) தான் எனக்கு மிகவும் பிடித்தபடம். அடூர் கோபாலகிருஷ்ணனின் முகாமுகம் படம். அதன் மைய கருத்துக்காகவும், ட்ரீட்மெண்ட்டுக்காகவும், அடுத்து எனக்குப் பிடிக்கும்.

* பிலிம் நிபுணர் ப்ரதீப் பஸ்வாஸ் கூறுகையில், எனது ஓட்டு 1969-ம் ஆண்டு வெளிவந்த மிரானல் சென்னின், புவன் ஷோம்-க்கு தான் என்றார்.

கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-

No comments:

 
FreeWebSubmission.com